அக்டோபர் 18, 2022 – குளோபல் நியூஸ்: முடியை நேராக்க ரசாயனங்களைப் பயன்படுத்தும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோயின் ஆபத்து அதிகம் என்று தேசிய சுகாதார நிறுவனங்களின் புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.
இந்த ஆய்வின் 33,497 பங்கேற்பாளர்களில், தங்கள் தலைமுடியை வருடத்திற்கு நான்கு முறைக்கு மேல் நேராக்க வடிவமைக்கப்பட்ட ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் கருப்பை புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பை இரண்டு மடங்கு அதிகம் பெற்றிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் 35 முதல் 74 வயதுக்குட்பட்ட ஒரு பெரிய பெண்களின் குழுவை 11 ஆண்டுகளாகப் ஆராய்ச்சி செய்தனர். அப்போது, 378 பேருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
கடந்த 12 மாதங்களில் முடியை நேராக்க ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தாத பெண்களில், 1.6 சதவீதம் பேர் 70 வயதிற்குள் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதேவேளை, இந்தப் பொருட்களை அடிக்கடி பயன்படுத்திய பெண்களில் சுமார் நான்கு சதவீதம் பேர் 70 வயதிற்குள் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று ஆய்வு கூறுகின்றது.
ஆய்வின் ஆசிரியரும் தேசிய சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் கழகத்தின் (NIEHS) ஆய்வாளருமான சந்திரா ஜாக்சன், கருப்பை புற்றுநோய் அரிதானது என்றாலும், “ஆபத்தை இரட்டிப்பாக்குவது சில கவலையளிக்கின்றது“ என்று குறிப்பிட்டார்.
“இந்த ஆய்வில், கடந்த ஆண்டில் அடிக்கடி பயன்படுத்தும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோயின் ஆபத்து இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது,” என்று அவர் CNN இடம் கூறினார்.
முந்தைய மற்றும் நடந்துகொண்டிருக்கும் ஆராய்ச்சி, முடியை நேராக்க ரசாயனங்கள் உட்பட சில முடி தயாரிப்புகளின் பயன்பாடு மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் போன்ற சில ஹார்மோன்களால் உருவாக்கப்படும் புற்றுநோய்களுடன் தொடர்புபடுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
புற்றுநோயுடன் தொடர்புடைய பல முடியை நேராக்கும் தயாரிப்புகளில் உள்ள இரசாயனங்கள் நாளமில்லாச் சுரப்பியை சீர்குலைக்கும் இரசாயனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இருப்பினும், மற்ற முடி சிகிச்சைகள் முடிக்கான சாயங்கள் மற்றும் பெர்ம்கள் போன்றவைகள் பயன்படுத்துவதனால் கருப்பை புற்றுநோய் தோன்றக்கூடிய எவ்வித வலுவான தொடர்புகளை இவ் ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்கவில்லை.
கறுப்பினப் பெண்கள் ஏனையவர்களை விட முடியை நேராக்க இவ்வாறான தயாரிப்புகளை அதிக அளவில் பயன்படுத்துவதால் அதிகம் பாதிக்கப்படலாம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கருப்பைப் புற்றுநோய் என்பது பெண் இனப்பெருக்க அமைப்பில் மிகவும் பொதுவான புற்றுநோயாகும், மேலும் கனடிய புற்றுநோய் சங்கத்தின் படி, கனடாவில் கருப்பை புற்றுநோயின் விகிதம் கடந்த 30 ஆண்டுகளாக படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இது பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் காணப்படுகிறது என்பதுடன் வெள்ளைப் பெண்களில் அதிகம் காணப்படுகிறது என்பதுடன், கருப்பை உள்ள எவருக்கும் இக்கருப்பை புற்றுநோய் உருவாகும் அபாயம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.