ஜனவரி 07, 2023: இஸ்லாமிய கோட்பாடுகளின்படி தங்களது அன்றாட வாழ்வை கடத்திக் கொண்டிருக்கும் பாலஸ்தீனத்தின் ஒரு குக்கிராமத்தில் வளர்கிறாள் ஃபர்ஹா (கரிம் தாஹிர்) திருமணத்தை மட்டும் கனவாக கொண்ட தனது சக தோழிகளுக்கு மத்தியில் கையில் நாவல்களுடனும், புத்தகங்களுடனும் ஓடிக்கொண்டிருக்கிறாள் ஃபர்ஹா. அவளுடைய தந்தை அக்கிராமத்தின் மேயராக இருக்கிறார்.
தன்னைச் சுற்றி பிற்போக்குதனங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தாலும் மகளின் கனவுகளுக்கு துணையாகவும், தனது கிராமத்தின் பாதுகாப்பில் அக்கறை கொண்டவராகவும் வெளிப்படுகிறது அம்மேயர் கதாபாத்திரம்.
15 வயதைக் கடக்கும் பெண்களுக்கு உடனடியாக திருமணத்தை முன்வைக்கும் சமூகத்தில் ஃபர்ஹாவை நோக்கியும் அந்தத் தருணம் திரும்புகிறது. “அவள் எதைப் படிக்க போகிறாள்… குரானைதான் அவள் படித்துவிட்டாளே?” என்ற தனது ஆசிரியரின் கேள்விக்கு, “நான் அரசியல், கணிதம், ஆங்கிலத்தைப் படிக்க போகிறேன்” என்று கோபமாய் கூறும் ஃபர்ஹாவின் வார்த்தை, அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் ஒட்டுமொத்த பெண்களின் குரலாக நம்முன் ஒலிக்கிறது.
எதிர்ப்புகளை மீறி தனது கிராமத்திலிருந்து வெளியேறி நகருக்குச் சென்று தனது படிப்பை தொடர்வதில் ஃபர்ஹா உறுதியாக நிற்கிறாள். தந்தையும் அதற்குச் சம்மதம் தெரிவிக்கிறார்.
நகரத்தில் சென்று மேல்படிப்பை தொடரப்போவதை நினைத்து மகிழ்ச்சியில் இருந்த ஃபர்ஹாவுக்கு அந்த மகிழ்ச்சி ஒருநாள் முழுவதும் கூட நீடிக்கவில்லை. அவளது நம்பிக்கை உடைப்படும் காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன.