ஜனவரி 09, 2023, கொழும்பு: குறைந்த விலையில் ஐபோன்கள் தருவதாகக் கூறி 500 பேரிடம் 50 மில்லியன் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, மாதம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபர், இரு நபர்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைத்தொலைபேசி தருவதாகக் கூறி 7.5 மில்லியன் ரூபாவை சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சந்தேக நபருக்கு எதிராக கொள்ளுப்பிட்டி பொலிஸில் மாத்திரம் 500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் கொள்ளுப்பிட்டியில் கட்டிடமொன்றை வாடகைக்கு எடுத்து அந்த கட்டிடத்தில் வியாபாரம் செய்து இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். சந்தேகநபர் கைது செய்யப்படும் போது இதேபோன்ற சம்பவம் தொடர்பில் பிணையில் இருந்ததாகவும், சந்தேகநபரின் வியாபாரம் மூடப்பட்டுள்ளதாகவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.