டிசம்பர் 24, 2022, கொழும்பு: சிறுநீரக மோசடி மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்ட சூழ்ச்சியான ஊடக நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும் என சுகாதார அமைச்சுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, தனது மருத்துவமனை பல முறை பொய்யான குற்றச்சாட்டுகளால் குறிவைக்கப்பட்டதாகவும், பின்னர் அவை பொய் என நிரூபிக்கப்பட்டதாகவும் மனுதாரர் மனுவில் மேலும் கூறினார்.
வறியவர்களை ஏமாற்றி சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள நிலையில், கொழும்பு கோட்டா வீதியில் அமைந்துள்ள வெஸ்டர்ன் தனியார் வைத்தியசாலை தனது வைத்தியசாலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை தற்காலிகமாக இடைநிறுத்த சுகாதார அமைச்சு விதித்த தடைக்கு எதிராக நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளது.
அதன்படி குறித்த வைத்தியசாலையின் தலைவர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கட்டளை நீதிப் பேராணை (writ of Mandamus) மனு வொன்றை தாக்கல் செய்துள்ளார். மனுவின் பிரதிவாதியாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த மனுவானது கடந்த 16 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது. இதன்போது மனுதாரருக்காக நீலகண்டன் சட்ட நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் சட்டத்தரணி ஷஹீதா பாரி, புலஸ்தி ரூப சிங்க, ஹபீல் பாரிஸ், ரித்மி பெனரகம உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
இதன்போது முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேன் முறையீட்டு நீதிமன்றம், தற்போது வெஸ்டர்ன் தனியார் வைத்திய சாலையில் சிகிச்சை பெறும் இரு சிறுநீரக நோயாளிகளின் நலன்கள் தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு உத்தரவிட்டது.