ஜனவரி 07, 2023, கொழும்பு: பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் இனிப்பு குளிர்பானங்கள் மற்றும் கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை தடைசெய்து அரிசிமாவினால் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் இயற்கையான பழ பானங்களை விற்பனை செய்வதை ஊக்குவிக்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பான வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் முக்கிய உணவு கட்டுப்பாட்டாளராக செயற்படும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் கருத்துக்களை பெற்றுக்கொண்ட பின்னர் அவரது வழிகாட்டல்களுடன் மேற்படி குழுவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அக்குழுவில் சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு, கல்வியமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள், மவ்பிம லங்கா பதனம அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளடங்குவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மவ்பிம லங்கா பதனம அமைப்பின் பிரதிநிதிகளான ஆரியசீலி விக்ரமநாயக்க, டாக்டர் கே.எம். வசந்த பண்டார மற்றும் சுமித் வன்னியாரச்சி ஆகியோர் விவசாய அமைச்சரை சந்தித்து மேற்படி வேலைத்திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் மட்டுமன்றி அரச நிறுவனங்களில் சிற்றுண்டிச்சாலைகளில் கோதுமை உற்பத்திப் பொருட்கள், இனிப்புப் பான வகைகள் ஆகியவற்றை தடைசெய்து அரிசி மா உற்பத்தி உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கையான பழ வகையில் தயாரிக்கப்படும் பானங்களை விற்பனை செய்வதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.