ஏப்ரல் 14, 2023, கொழும்பு: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், புத்தாண்டில் மேலும் செல்வச் செழிப்புடனும், வளத்துடனும் இருக்க, ஒரே இலங்கை தேசமாக ஒற்றுமையாக முன்னோக்கிச் செல்லுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் செய்தியின் முழு விவரம் வருமாறு:
சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறியதைத் தொடர்ந்து வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு விடியலானது நாட்டிலுள்ள சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாக கருதப்படுகிறது.
இந்த மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில், ஏராளமான செழிப்பைப் பெற வேண்டும் என்ற விருப்பத்துடன், மக்கள் பாரம்பரியமாக புத்தாண்டு பழக்கவழக்கங்களை நிர்ணயிக்கப்பட்ட நல்ல நேரங்களில் கடைபிடிக்கின்றனர்.
கடந்த ஆண்டு, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், எங்களின் அன்றாட வாழ்கையை சீர்குலைத்த நாங்கள், சொல்லொணா சிரமத்துடன் புத்தாண்டு சடங்குகளில் ஈடுபட்டு, இந்த அவலநிலையைப் போக்குவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டோம்.
எவ்வாறாயினும், இந்த ஆண்டின் ஆரம்பம் நம் அனைவருக்கும் ஒரு நல்ல சூழலை வழங்கியுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், எனவே நாம் இன்று இருப்பதை விட மிகவும் செல்வச் செழிப்புடன் இருக்க முயற்சி செய்ய வேண்டும். ஒரு இலங்கை தேசமாக ஒற்றுமையாக முன்னோக்கிச் செல்வதன் மூலம் நாம் சந்தேகத்திற்கு இடமின்றி இந்த அபிலாஷையை அடைய முடியும். அதன்படி, அரசியல் சார்பு, இனம் மற்றும் மத வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்த புத்தாண்டில் நமக்கும் நமது தேசத்திற்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க ஒரு புதிய ஆரம்பம் கட்டாயமாகும்.
இங்கும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!